வியாழன், செப்டம்பர் 11 || உம் சித்தம் செய்ய எனக்குக் கற்றுத்தாரும்
- Honey Drops for Every Soul

- Sep 11, 2025
- 1 min read
வாசிக்க: சங்கீதம் 143:1-12
உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக. -சங்கீதம் 143:10
வாழ்க்கையில் நாம் எடுத்து வைக்கப்போகும் அடுத்த அடி என்னவென்று தெரியாமல் நிச்சயமற்றதாகத் தோன்றும் பல நேரங்கள் நமக்குக் காணப்படலாம். மனம் குழம்பியிருப்பதால் எதிரில் இருக்கும் பாதை தெளிவற்றதாகவும் சமமற்றதாகவும் நமக்குத் தோன்றும். ஆழ்ந்த துயரத்தில் இருந்த தாவீது தேவனிடத்தில் முதலில் ஆறுதலைக் கேட்கவில்லை;-மாறாக செம்மையான வழியைக் காட்டும்படி ஜெபித்தான். தேவனின் சித்தத்தை அறிந்துகொள்ள மட்டுமல்ல, அதைச் செய்துமுடிக்கவும் அவன் ஜெபித்தான். இதுதான் அர்ப்பணிக்கப்பட்ட இருதயத்தின் அடையாளம். அதாவது, தேவனிடத்தில் பதிலைத் தேடுவதோடு நின்றுவிடாமல் முற்றிலும் அவருக்குக் கீழ்ப்படிய நாடுகிறான் தாவீது. பரிசுத்த அவியின் வழிநடத்துதல் இல்லாவிட்டால், தான் வழிதப்பிப் போவான் என்பதை அறிந்திருந்தான் தாவீது. எனவே, போதித்தருளும், நடத்தும் என்று அவன் ஜெபித்தான். இந்த எளிமையான ஜெபம் ஆழமான நம்பிக்கை, ஆண்டவரை சார்ந்துகொள்ளுதல் ஆகியவற்றைக் குறிக்கிறது.
அன்பானவர்களே, நாமும் அனுதினமும் தேவனால் போதிக்கப்படவேண்டும். சுய ஞானத்தையோ, சுய பெலத்தையோ நம்மால் சார்ந்துகொள்ள முடியாது. கர்த்தரின் சித்தப்படி நடப்பதென்றால், அவருடைய வழிமுறைகளுக்கு தாழ்மையுடன் அடங்கி நடப்பது, அவருடைய வார்த்தைக்கு கவனமாகச் செவிகொடுப்பது, ஆவியானவருடைய நடத்துதலின்மீது நம்பிக்கை வைப்பது, மற்றும் பாதை கடினமாக இருந்தாலும் அவருக்குக் கீழ்ப்படிவது என்பதாகும். தேவ ஆவியானவர் நம்மைக் கோணலான பாதைகளில் அல்ல, நீதியும் சமாதானமுமான சமனான பாதைகளில்தான் நடத்துவார். நீதிமொழிகள் 3:6, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள். அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார் என்று நமக்கு நினைப்பூட்டுகிறது. தேவனுடைய குரலை நாம் பின்பற்றினால், அவர் நம் பயத்தை நீக்கி நம் நடைகளை உறுதிப்படுத்துவார். தேவனுடைய கிருபை தங்காத இடத்துக்கு தேவசித்தம் நம்மை நடத்திச் செல்லாது. எனவே, நம்மை மீண்டும் மீண்டும் போதித்து முன் நடத்தும்படி ஒவ்வொரு நாள் காலையிலும் அவரிடம் கேட்போம். ஜெபம்: அன்புள்ள ஆண்டவரே, நீர் என் தேவன் உம் சித்தத்தை என் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் செய்ய எனக்குப் போதியும். நான் தெளிவாகப் பார்க்க இயலாதபோது, உம் ஆவியானவரால் என்னை நடத்தும். நான் கால் மிதிக்கும் பாதையை எல்லாம் நீர் சமமாக்குவீர் என்று அறிந்து, நீர் தெரிந்தெடுக்கும் பாதையில் உத்தமமாக நடக்க எனக்கும் உதவுவீராக. ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177




Comments