புதன், ஆகஸ்ட் 13 || ஜெபத்துக்கு வரும் தடைகள்
- Honey Drops for Every Soul

- Aug 13
- 1 min read
வாசிக்க: தானியேல் 6: 4-11
... சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது. - மத்தேயு 26:41
ஜெபிக்கும் மக்கள்தான் பரலோக ராஜ்யத்தின் பூலோகப் பிரதிநிதிகள்; அவர்களுக்கென்று பிரத்தியேகமான வேலையைக் கர்த்தர் தந்திருக்கிறார் என்று இ எம் பவுண்ட்ஸ் எழுதுகிறார். ஆனால், கர்த்தர் தரும் இந்த கௌரவமான பொறுப்பை ஏற்றுக்கொள்ளுவதில் தயக்கம் காட்டுவதால், அநேகர் ஜெபிப்பதற்கு நேரமெடுப்பதில்லை. அப்படியே அவர்கள் ஜெபிக்க முடிவெடுத்தாலும், அவர்கள் அநேக தடைகளைச் சந்திக்க நேரிடுவதால் சோர்ந்துபோய் ஜெபத்தைப் பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள். ஆஸ்வால்ட் ஸ்மித், இப்படிப்பட்ட தடைகளை அவர் எப்படி மேற்கொண்டார் என கூறியிருக்கிறார்.
முதலாவதாக, ஆஸ்வால்ட் ஸ்மித் தன்னுடைய நூலக அறையையே ஜெப அறையாக மாற்றிக்கொண்டார். காலை உணவுக்குப்பின் ஒரு மணிநேரத்தைத் தன் ஜெப நேரமாக ஆக்கிக்கொண்ட அவர், தமது அறையைப் பூட்டிக்கொண்டு ஜெபிப்பார்.
இரண்டாவதாக, உட்கார்ந்து அல்லது முழங்காற்படியிட்டு நீண்டநேரம் ஜெபிக்கும்போது தூக்கம் கண்களைச் சுழற்றுவதுண்டு. நான் தனிமையில் ஜெபிக்கும்போது முழங்காற்படியிடுவதை, உட்காருவதை, நிற்பதைத் தவிர்த்து, நடந்துகொண்டே ஜெபிப்பேன். என் வாழ்நாளில் இப்படி ஜெபித்ததன்மூலம் நான் நடந்த தூரம் பல மைல்கள் இருக்கும் என்கிறார் ஆஸ்வால்ட்.
மூன்றாவதாக, ஜெபிக்க ஆரம்பிக்கும்போதுதான் இல்லாத கவலைகள், பயங்கள் உள்ளத்தில் தோன்றும். இதற்கும் ஆஸ்வால்ட் ஒரு வழி கடைப்பிடித்தார். நான் நடந்து ஜெபிக்கையில் அமைதியாக ஜெபிப்பதில்லை. வாய்விட்டு சத்தமாக ஜெபிப்பேன். இப்படி நான் ஜெபித்தபோது நேரம் மிக விரைவாகக் கடந்துசென்றதை உணர்ந்திருக்கிறேன். பதினைந்து நிமிடம் ஜெபித்திருப்போம் என்று நினைத்து கண்களைத் திறந்து பார்த்தால் ஒரு மணிநேரம்கூட கடந்துபோயிருக்கும். இது என் அனுபவம் என்கிறார் ஆஸ்வால்ட்.
அன்பானவர்களே, இப்படிப்பட்ட தேவமனிதர்களின் அனுபவத்தை நமது அனுபவமாக மாற்றிக்கொண்டால், நாமும் ஜெபத்தடைகளை மேற்கொண்டு சிறந்த ஜெபவீரர்களாக வாழமுடியும். அதற்கு பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்வாராக.ஜெபம்: தகப்பனே, நான் ஜெபிக்கத் தொடங்கும்போதெல்லாம் பல தடைகள் வருவதைக் காண்கிறேன். இதனால் ஜெபவாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இன்று நீர் கொடுத்த ஆலோசனைகளுக்காக நன்றி. தடைகளை மேற்கொண்ட ஜெபவீரனாகத் திகழ எனக்கு உமது ஆவியின் வல்லமையைத் தாரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments